உணவுக்கும் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு, அதாவது உண்ணும் உணவே நம் உணர்வாக வெளிப்படுகிறது. அன்னையோடு அறுசுவை உண்டிபோம் என்று அறுசுவை உணவுக்கும் அம்மாவுக்கும் உள்ள தொடர்பை பட்டினத்தார் குறிப்பிட்டுள்ளார். எனவேதான், அம்மையப்பராக இருந்து உலகைக் காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.
ஐப்பசி பவுர்ணமியன்று, உச்சிக்கால பூஜையின் போது இந்த அபிஷேகத்தை நடத்துவது மரபாக உள்ளது. அன்னத்தை தெய்வம் என்பார்கள். சிதம்பரம் தில்லைச் சிற்றம்பலத்தில் ஸ்படிகலிங்கத்துக்குத் தினமும் அன்ன அபிஷேகம் நடைபெறுகிறது. இதனாலேயே சிதம்பரத்திற்கு அன்ன க்ஷத்திரம் என்ற பெயரும் உண்டு. இதே போல் அனைத்து சிவ ஆலயங்களிலும் தினமும் அன்ன அபிஷேகம் செய்து நம் ஊர்களை எல்லாம் வளமுள்ளதாக்குவோம்.
ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது. தீயில் நீரும், நீரில் நிலமும் பிறக்கின்றன. நிலத்தில் விளைந்த அரிசி, நீரில் மூழ்கி, தீயால் வெந்து அன்னமாகிறது. எனவே, அன்னம் என்பது ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கை. அன்னம், அபிஷேகத்தின் போது ஆண்டவனை முழுவதும் அனைத்துத் தழுவிக்கொள்கிறது. அவனிடமே அடைக்கலமாகிறது. இதன் மூலம் ஐம்பெரும் பூதங்களும் ஆண்டவனிடம் அடைக்கலம் என்பதும், அவற்றின் உள்ளிருந்து இயங்கும் ஆண்டவனே பரம்பொருள் என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றன.
வழிபாட்டு முறைகள் எத்தனையோ இருந்தாலும், இறையருளைப் பெற எளியவழியாக இருப்பது அன்னதானம் மட்டும் தான். பொன், பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை. இன்னும் கொடுக்கக் கூடாதா என்று எதிர்பார்ப்புடனே இருக்கும். ஆனால், ஒருவன் வேண்டும் என்று கேட்ட அதே வாயால் போதும் என்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும் போது மட்டுமே.
அன்னபூரணி:
நமக்கு அன்னமூட்டும் தாயாக விளங்குபவள் அன்னபூரணி. காசியில் இருக்கும் இவளது கையில் பால் அன்னம் நிறைந்த பாத்திரமும், கரண்டியும் இருக்கும். தம்மை நாடிவருவோருக்கு வயிற்றுப்பசியை மட்டுமல்லாமல் ஆன்மபசியையும் போக்கி அருள்கிறாள். திருமூலர் திருமந்திரத்தில் அன்பே சிவம் என்று குறிப்பிடுகிறார். அறிவான தெய்வமே என்று இறைவனை தாயுமானவர் அழைக்கிறார். இந்த அன்பையும், அறிவையும் நமக்குத் தருபவள் அன்னபூரணி.
சக மனிதனின் பசியைப் போக்குபவன் கடவுளின் தயவைப் பூரணமாகப் பெறும் தகுதி பெறுகிறான். பசி என்னும் கொடுமை ஏழைகளின் மீது பாய்ந்து கொல்லும் தருணத்தில், உணவிட்டுக் காப்பதே ஜீவகாருண்யமாகும். அன்னதானம் இடுபவரை வெயில் வருத்தாது. வறுமை தீண்டாது. இறையருள் எப்போதும் துணை நிற்கும். மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும்.
அபிஷேகப்பிரியனுக்கு அன்னாபிஷேகம்!
அபிஷேகப் பிரியரான சிவபெருமான், அபிஷேக நேரங்களில் பல்வேறு திரவியங்களால் திருமுழுக்காட்டு செய்விக்கப் பெறுகிறார். பின்னரும் லிங்கத் திருமேனியின் மேலே தாரா பாத்திரம் எனப்படும் செம்புப் பாத்திரத்தில் நீர் நிறைத்து, சொட்டு சொட்டாக லிங்கத் திருமேனியின்மீது அபிஷேகிக்கப்படும் தாரை அமைப்பை பல ஆலயங்களிலும்- குறிப்பாக வடமாநிலங்களில் நாம் காணமுடியும். இந்த அபிஷேக வரிசையில், ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்படுகிறது.
அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்த அன்னத்தைக் கொண்டு முழுக்காட்டுவது இந்த நாளின் சிறப்பாகும். இனிப்பு, காய்கறி மற்றும் பழங்களுடன் செய்யப்படும் சுத்த அன்னாபிஷேகக் காட்சி, ஆலயத்துக்கு வழிபட வரும் பக்தர்களை பரவசத்துக்குள்ளாக்குகிறது. இந்த அன்னாபிஷேக நாளன்று சிவாலயங்களில் கருவறையிலுள்ள சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனை முடிந்த பின்னர், சமைத்த சுத்த அன்னத்தைக் கொண்டு திருமுழுக்காட்டப்படுகிறது. லிங்கத் திருமேனி மறையுமளவுக்கு அன்னம் குவிக்கப்பட்டு, இனிப்புகள், பழங்கள் நிவேதனதுக்கு வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெறுகின்றன.
இந்த அன்னாபிஷேக நாளன்று இறைவனைத் தரிசித்து பிரசாதத்தை உட்கொள்வதை பெரும்பேறாக பக்தர்கள் கருதுவதுடன், வரும்காலங்களில் வாழ்வில் பஞ்சமே இராது என்றும் நம்புகின்றனர். அத்துடன் அபிஷேக அன்னத்தை எறும்பு, கால்நடை, பறவை உள்ளிட்ட எல்லா உயிர்களுக்கும் அளிப்பர்.

